அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு வருடத்திலும் முஸ்லிம்களுக்கு சில விஷேச மாதங்களைக் கொண்டு சிறப்பாக்கியுள்ளான். உதாரணமாக ரமழான் மாதத்தைக்கொண்டு கண்ணியப்படுத்தியிருப்பது போல் நாளில் லைலத்துல் கத்ரைக் கொண்டும் கண்ணியப்படுத்தியுள்ளான். எனவேதான் ரமழான் மாதத்தின் கண்ணியத்தைப் பற்றி பிள்வருமாறு இறைவன் கூறுகின்றான்.

ரமழான் மாதமாகிறது அதில்தான் குர்ஆன் இறக்கப்பட்டது. அதாவது மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிந்து அழகிய முறையில் அவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக’ என்று கூறிவிட்டு இந்த ரமழான் மாதத்தை யார் அடைந்து கொள்கின்றார்களோ அதில் அவர்கள் நோன்பு நோற்கவும். இன்னும் யார் நோயாளியாக இருக்கிறார்களோ அல்லது பிரயாணியாக இருக்கிறார்களோ அவர் மற்ற ஏனைய நாட்களில் அதைக் கணக்கிட்டுப் பிடித்துக் கொள்ளவும் அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே நாடுகின்றான். இன்னும் அவன் உங்களைக் கஷ்டப்படுத்த நாடவில்லை….. மேற்கூறிய திருவசனத்திலிருந்து நாம் விளங்குவது யாதெனில் பாவங்களில் புரண்டு கொண்டிருக்கும் மனிதன் அவர்கள் ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி இந்தப் புனித மாதத்தில் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோரி நல்லமல்கள் செய்து தன்னை ஒரு புனிதனாக மாற்றிக்ெகாள்ள வேண்டும்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவர் ஒருவர் ரமழான் மாதம் வருவதையிட்டு சந்தோஷம் அடைகிறாரோ அவருடைய உடலை அல்லாஹ் நரகத்திற்கு ஹராமாக்கியுள்ளான் என்று கூறியுள்ளார்கள். மேற்குறிப்பிட்ட மணிமொழியிலிருந்து நாம் விளங்குவது எப்போதும் விஷேசமாக இந்த ரமழான் மாதத்தை சந்தோஷப்படுத்துவது என்பது படைத்த இறைவனை அஞ்சி நடந்து தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், குர்ஆன் ஓதல்,  ஸலவாத்துக்கூறல், திக்ர்  செய்தல் போன்ற நற்கிரியைகள் செய்வதன் மூலமே நாம் சந்தோஷப்படுத்தியவர்களாக ஆக முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை ரசூல் (ஸல்) அவர்கள்  ஸஹாபாக்களுக்கு நல்லுபதேசம் செய்து கொண்டிருந்தார்கள். அதாவது நிச்சயமாக உங்களுக்கு ரமழான் மாதம் வந்துவிட்டது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதைக் கடமையாக்கியுள்ளான். இதில்தான் சுவர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரக  வாசல்கள் பூடப்படுகின்றன. மேலும் இதில்தான் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. இதில்தான் ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான இரவு இருக்கின்றது என்றார்கள்.

எனவே இந்த மாதத்தை அடைந்தும் நற்காரியங்கள்  புரிந்து தன்னைத்திருத்திக் கொள்ளவில்லை என்றால் அவன் நாசமாகட்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது சிந்திக்கக் கூடிய ஒன்றாகும்.

மெளலவி செய்யிது கலீல் மௌலானா