“ஆடி காற்றில் அம்மிகல்லும் பறக்கும்” என்பது ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்றின் தன்மையை குறிக்கும் ஒரு பழமொழி ஆகும். 12 இராசிகளில் நீர் ராசியான சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமே ஆடி மாதம் ஆகும். எனவே இந்த மாதத்தில் சூரியனுக்குரிய வெப்பம், சந்திரனுக்குரிய மழை பொழிவு கலந்து ஏற்படும் ஒரு மாதமாக இருக்கிறது. அப்படியான இந்த ஆடி மாதம் பல்வேறு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் இன்று சிறப்பான நாள்.

அதாவது, ஆடி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் இன்று. ஆடி வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்கும் முறை மற்றும் அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இறைவழிபாடு அதிலும் குறிப்பாக பெண் தெய்வங்களை வழிபடுவதற்குரிய ஊரு தெய்வீக மாதமாக ஆடி மாதம் இருக்கிறது.

மேலும் இந்த மாதத்தில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இருக்கும் தினமான, முன்னோர்களின் வழிபாட்டிற்குரிய ஆடி அமாவாசை தினமும் வருகிறது. எனவே இம்மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களுமே மகத்துவம் வாய்ந்தவையாகும். இந்த ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் விரதம் மற்றும் வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் அனைத்து சம்பத்துகளும் சேரும் என்பது பெரியோர்களின் வாக்கு.

ஆடி வளர்பிறை அஷ்டமி அன்று பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறந்ததாகும். ஆடி வளர்பிறை அஷ்டமி தினம் அதிகாலையில் எழுந்து, குளித்து உடல் மற்றும் மன சுத்தியுடன் காலை முதல் மாலை வரையில் உணவு ஏதும் உண்ணாமல் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள பைரவர் கோயில் அல்லது சந்நிதிக்கு சென்று ஸ்ரீ பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து வழிபட வேண்டும்.

இந்த வழிபாட்டை எந்த ஒரு வடிவில் இருக்கும் பைரவர் கோயிலிலும் செய்யலாம். ஆடி வளர்பிறை அஷ்டமி தினத்தில் ஸ்ரீ பைரவரை வழிபடுவதால் சூரிய – சந்திர கிரகங்கள் மற்றும் ராகு – கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். உங்களையும், உங்கள் வீட்டையும் பிடித்திருக்கும் துஷ்டசக்திகள் நீங்கும். நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஒழியும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது குறைந்து செல்வ சேர்க்கை அதிகரிக்கும். பித்ரு சாபங்கள், குல சாபங்கள் போன்றவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை ஏற்படாமல் காக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here