பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மரியகே தனது 40 ஆவது வயதில் கருணை கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரியகே வெர்வூர்ட். தனது 14 வது வயதில் ‘டிஜெனரேட்டிவ்’ தசை நோயால் பாதிக்கப்பட்டார். முதுகுத்தண்டு சம்பந்தமான இந்த நோய், நாட்கள் செல்ல செல்ல மூளைப்பகுதிக்கும், தசைகளுக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும். ஒரு கட்டத்தில், பக்கவாதம் ஏற்படும். இப்படிப்பட்ட ஆபத்தான நோயில், சிக்கியபோதும் மரியகே மனம் தளராமல் போராடினார்.

சக்கர நாக்காலியில் அமர்ந்து கொண்டு கூடைப்பந்து, நீச்சல், தடகளத்தில் சாதித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் 100 மீ., பிரிவில் தங்கம் வென்றார். 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். உலக சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்றுள்ளார்.

2016 இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் , 400 மீ., பிரிவில் வெள்ளி, 100 மீ., பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். இதன்பின், பார்வை குறைபாடு ஏற்பட, இதுவே கடைசி போட்டி என அறிவித்தார்.

ஒவ்வொரு நாளும் வலியோடு போராடிய இவர், 2008 ஆம் ஆண்டில் கருணைக்கொலைக்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந் நிலையில் பெல்ஜியத்தில் உள்ள டயஸ்ட் நகரில் ஒப்பந்தபடி, நேற்றுமுன்தினம் கருணை கொலை செய்யப்பட்டார்.