மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் அனுமதி… என்ன காரணம்? வெளியான அறிக்கை

பிரபல திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பெரும் நடிகர்களாக பார்க்கப்படுபவர்கள் ரஜினி-கமல். இதில் கமல் அதிரடியாக அரசியலில் நுழைந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இவரின் நண்பர் என்று கூறப்படும் ரஜினி விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதால், இவர்கள் இருவரும் இணையலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதனால் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளவுள்ளார் என்று மக்கள் நீதிமய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அதை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொறுத்தப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் தலைவர் அவர்களுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிபோய்கொண்டிருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனை படி கமல்ஹாசன் வரும் 22.11.2019 அன்று அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்குப்பின் அவர் நம்மை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார்.

41 Views