முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை: 35 வது வருட நினைவு தினம் அனுஷ்ப்பு

முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவ சீருடை தரித்தவர்களால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் நினைவு தினம் இன்று ஒதியமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஓதியமலை வாசிகசாலையில் அமைக்கப்பட்டுள்ள அவர்களது நினைவுத்தூபி முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும், மலர்மாலை அணிவித்தும், மலர் தூபியும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

இப்படுகொலையில் உறவுகளை பறிகொடுத்த கிராம மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

1984.12.02 ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை இவ் வாசிகசாலைக்கு வருமாறு அழைத்து அவர்களை கூட்டிச் சென்று சுட்ட படுகொலை செய்ததாக தெரிவித்தனர்.

இந்நினைவு தினம் காரணமாக இக் கிராமமே இன்று சோகத்தில் ஈழ்ந்தது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், க.சிவனேசன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் , வவுனியா வடக்கு பிரதேச சபைத் தலைவர் தணிகாசலம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , அவ்வூர் மக்கள் எனப் பலரும் திரண்டு அங்சலி செலுத்தினர்.