தமீழழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தமிழக சட்ட சபையில் கடும் வாக்கு வாதங்கள் இடம்பெற்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செம்மலை,

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்தபோது, அவரை அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது.

ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்காக தி.மு.க. போராடுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவர் பேசியதன் பின்னர் பதிலளித்துப் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், பிரபாகரன் ஒரு தீவிரவாதி என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்தது ஏன் என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார்.

துரைமுருகனுக்கு இக் கேள்விக்குப் பதில் வழங்கிய செம்மலை, பிரபாகரன் நல்ல வழியில் சென்றபோது, அவரை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஆதரித்தார்கள். ஆனால் அவர் வழி தவறியபோது அ.தி.மு.க.வுக்கு அவர் மீதான அனுதாபம் குறைந்தது என்றார்.

இதேவேளை, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.

அவரின் இக்குற்றச்சாட்டுக்குப் பதில் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்தியில் 12 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தராமல் எங்கே போனீர்கள்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கும் வரை, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு என்றார்.