இந்தியாவில் மகள் காணமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அதை அலட்சியப்படுத்தியதால், தற்போது அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் திகதி தன் சகோதரியுடன் வெளியில் சென்றுள்ளார்.

வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஆனால் அவரது சகோதரி மட்டும் வீடு திரும்பியிருந்தார். பெற்றோர் மகளை தேடிய போது எங்கும் கிடைக்காத காரணத்தினால், இது குறித்து கடந்த 1-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..

பொலிசார் புகாரை பதிவு செய்யாமல், அந்த பெண்ணின் சகோதரியை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவரின் சகோதரி பிமல் பர்வாட் என்பவர் அவரது காரில் பெண்ணை ஏற்றி சென்றதாகவும் இதுகுறித்து யார் கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாது என்று கூறியதாக பொலிசில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் கடந்த 3-ஆம் திகதி பெண்ணின் பெற்றோரை அழைத்து, காரில் வந்த நபருக்கும் உங்கள் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து கடந்த 5-ஆம் திகதி சரியா என்ற பகுதியில் இருக்கும் ஆல மரத்தில், காணமல் போனதாக கூறப்பட்ட பெண் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இது குறித்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கபட, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன் பின் அந்த பெண்ணின் தாத்தா, பிமல் பர்வாட் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது புகார் அளித்தார். மேலும் வழக்குப்பதிவு செய்ய மறுத்து காவல் ஆய்வாளர் ரபாரியை சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

தற்போது காரில் கடத்தி சென்றதாக கூறப்பட்ட பிமலிடம் விசாரணை நடந்ததாகவும், அப்போது பிமல், கடத்தப்பட்ட கார் மட்டும் என்னுடையது, ஆனால் பெண்ணை கடத்தியது என் நண்பர்கள் தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட், ஜிகார், இந்த 3 பேர்தான் என்று கூறியுள்ளதால், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.