வவுனியா, செட்டிக்குளத்தில் நல்ல நிலையில் உள்ள வீதியால் மன்னாருக்கு கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துமாறுக் கோரி இன்று வீதியை மறித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, செட்டிக்குளம், உலுக்குளம் வீதியில் வீதித்தடையை ஏற்படுத்தி, கிரவல் கொண்டு சென்ற டிப்பர் வாகனங்களை வழிமறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

செட்டிக்குளம், உலுக்குளம் வீதி 2014ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த வீதியின் ஊடாகவே மதவாச்சியில் இருந்து மன்னாருக்கான கிரவல் கொண்டு செல்லப்படுவதாகவும், செட்டிக்குளத்தில் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள கிரவல் அகழ்வினால் அங்கிருந்து செல்லும் டிப்பர்களாலும் வீதி சேதமடைந்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்ன அவர்களின் இணைப்பாளர் கணேசலிங்கம் பிறேம் அவர்கள் இவ் விடயங்களை கேட்டறிந்து கொண்டு உடனடியாக மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறும் அதனை கண்காணிப்பதற்கு இரு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளார்.