வவுனியா மாவட்டத்தில் இலை மறை காய்களாக பல திறமைகளுடன் கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள் அண்மைக் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தை வெற்றிபெற்று கிராம்ப்புறங்களில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

14 வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்டு மயில்வாகனம் பிளசிகா,மற்றும் ராஜசேகரம் வினோதா ஆகிய இரண்டு மாணவிகளும் பல சவால்களுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகி மொறட்டுவையில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தைப் வெற்றிபெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

முதல் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக பாடசாலை சமூகமும் கிராம மக்களும் இணைந்து புதுக்குளம் சிவன் ஆலயத்திலிருந்து வாகனப் போரணியுடன் கௌரவமாக அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் கு.செந்தில்குமரன், உடல்கல்வி ஆசிரிய ஆலோசகர் இ.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி பத்மா ஜெயச்சந்திரன், பயிற்றுவிப்பாளர்களான சுரங்கா மற்றும் நிக்ஷன ரூபராஜ் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள,; பெற்றோர் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர், பழைய மாணவர்கள் சமூக ஆர்வலர்களென பலரும் கலந்து கொண்டு சாதனை மாணவிகளை கௌரவித்தனர்.

இந் நிகழ்வுக்கான அனுசரணையை லண்டன் சரஸ்வதி பவுண்டேசன் கஜேந்திரன் பிரகலாதினி குடும்பத்தினர் வழங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here