குளியாப்பிட்டிய பன்னலை, ஹெலபடகம பிரதேசத்தில் 2.7 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷெஹான் மதுசங்கவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பன்னலை பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதலில் மதுசங்க கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

எனினும் இந்த கைது நடவடிக்கையின் போது பொலிஸார் நடந்துக்கொண்ட விதம் தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்படுவதால், அடுத்த வழக்கு விசாரணையில் சுருக்கமான சான்றறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கிரிக்கெட் வீரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரியுள்ளார்.

எனினும் பொலிஸார் சட்டப்படி செயற்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நடவடிக்கை சட்டரீதியாக மேற்கொள்ளப்ப்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here