வணக்கஸ்தலங்களில் இன்று முதல் தனிநபர் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இன்று இந்து ஆலயங்களும் திறக்கப்பட்டுள்ளன.

இந்து ஆலயங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விடயங்கள் வெளிவந்துள்ளன.

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலய அறங்காவலர்/நிர்வாகத்தினர் / உரிமையாளர் கவனஞ் செலுத்த வேண்டிய விடயங்கள்…

 • ஆலயங்களில், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து (அந்த ஆலயத்திற்குட்பட்ட கட்டடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூடக் கூடிய ஆகக் கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
 • இருப்பினும், சமூக இடைவெளியைப் பாதுகாத்து 50 தனிநபர்கள் ஒன்றுகூடக் கூடிய இடவசதி இல்லாத ஆலயங்கள் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அனுமக்கப்பட்ட எண்ணிக்கையில் மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும்.
 • ஆலயங்களில் வழமையான பூஜை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவிதக் கூட்டுச் செயற்பாடுகளையோ ஒன்றுகூடலையோ அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு கூட்டுப் பிரார்த்தனைகள், திருவிழாக்கள் அல்லது அன்னதானம் வழங்கல் போன்ற ஒன்றுகூடல்கள் நடத்தும் தேவை ஏற்படும் போது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 • ஆலயங்களில், நுழைவு வாயிலில் கை கழுவுவதற்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதுடன், நுழைவதற்கு ஒரு வாயிலூடாக மாத்திரம் மக்கள் செல்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.
 • கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் எல்லா ஆலயங்களும் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
 • ஒரு இந்துமத குரு அல்லது யாராயினும் ஒரு ஆலயப் பணியாளர்/தொண்டர் சுகவீனமடைந்தால் அல்லது கொவிட் 19 இன் அறிகுறிகள் ஏதாவதைக் கொண்டிருந்தால் உடனடியாக சுகாதார ஆலோசனையை நாட வேண்டும். அத்துடன் அவர்கள் உடனடியாக மக்களுடனான இடைத்தொடர்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 • தேவையேற்படின் மக்கள் கூட்டம் ஆலயத்தினுள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்குப் பிரதேச பொலிசாரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 • அனைத்துப் பக்தர்களும் ஆலயத்தினுள் முகமறைப்பைக்(Mask) கட்டாயமாக அணிய வேண்டும்.
 • மக்களுடன் குரு உரையாடும் போது அல்லது மக்களைச் சந்திக்கும் போது குருவுங் கூட முக மறைப்பை (Mask) அணிந்திருத்தல் வேண்டும்.
 • பக்தர்களை வீடுகளில் இருந்தவாறே சமய வழிபாடுகளை நிறைவேற்றும்படி ஊக்குவித்தல். வேண்டும்.
 • ஆலயங்களில் திருவிழாக்கள் போன்ற விசேட சமயச் செயற்பாடுகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை அவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை மக்கள் அதிகளவில் ஒன்றுகூடி உணவு பரிமாறுதலை அதிகரிக்கச் செய்யும். உணவு மற்றும் பிரசாதமானது பக்தர்களுக்கு / மக்களுக்கு மத்தியில், வழிபாட்டுத் தலத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ பகிர்ந்தளித்தல் கூடாது. அத்துடன் தீர்த்தம் அல்லது பிரசாதம் ஆகியவற்றைப் பங்கிடுதலையுந் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் தங்களாற் சேகரிக்கப்பட்ட புனிதநீர், பிரசாதம் ஆகியவற்றைப் புனித தலத்தின் உள்ளேயோ வெளியேயோ விட்டுச் செல்ல வேண்டாம்.
 • ஆலயங்களில், கூட்டம் கூடுவதையோ சிறு குழுக்களாகக் கூடக் கூடுவதையோ மிகக் கட்டாயமாகத் தவிர்க்கவேண்டும்.
 • ஆலய குருவுடனான சந்திப்புக்களின் போது, தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
 • பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரினால் ஆலய அறங்காவலருக்கு வழங்கப்படும் ஒரு உறுதி மொழிப் படிவத்தை, அதிற் காணப்படும் அறிவுறுத்தல்களுக்கமைவாக நிரப்புதல் வேண்டும். நிரப்பப்பட்ட உறுதிமொழிப் படிவத்தை உள்ளூராட்சிச் சபைகளான (மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை) ஆகியவற்றில் கையளிக்க வேண்டும். அதில் ஒரு பிரதி பிரதேச வைத்திய அதிகாரிக்கும் அனுப்பப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைக் கடினமாகப் பின்பற்றுவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் ஆலயத் தலைவர்/தலைமை அறங்காவலரின் பொறுப்பாகும்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்..

 • சமய வழிபாடுகளைப் பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி, வீட்டிலேயே மேற்கொள்ள வேண்டும்.
 • ஆலயத்தினுள் நுழையும் போது எப்பொழுதும் முகமறைப்பை (Mask) அணிதல் வேண்டும். எல்லோருடனும் ஒரு மீற்றர் தூர இடைவெளியைப் பேணுதல் வேண்டும். கை கழுவாமல் முகத்தைத் தொட வேண்டாம்.
 • பொதுமக்கள் ஏதாவது நிவேதனஞ் செய்ய எடுத்துச் செல்லும் பொருட்களைத் தங்களின் சொந்தப் பாத்திரங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் அவற்றைச் சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவுதல் வேண்டும்.
 • பூஜை வழிபாடுகளின் போது மதகுருவினால் வழங்கப்படும் பிரசாதத்தினை முதலிற் பெறுபவர் அதனைக் கையிற் பெற்ற பின்னர் அவ்விடத்திலிருந்து விலகிச் சென்ற பின் ஏனையோரும் அவ்வாறே விரைவாகப் பெற்று விலகி நிற்றல் வேண்டும். இதன் போது எந்தவித மேற்பரப்புக்களிலுந் தொடுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
 • முடியுமானவரையில் மிகக்குறைந்த நேரத்தை ஆலய வளாகத்தினுட் செலவிடல் வேண்டும். தேவையற்ற விதத்தில் ஆலய வளாகத்தினுள் மற்றவர்களுடன் உரையாடி அலைந்து திரிதல் கூடாது.
 • வாழ்த்துதலின் போது கலாசார முறையிலுஞ் சமய ரீதியிலும் அனுமதிக்கப்பட்ட உடல் தொடுகையுறுதலைத் தவிர்த்துப் பாரம்பரிய முறைகளை பின்பற்றுதல் வேண்டும். (உதாரணமாக:- கைகூப்பி வணக்கம் தெரிவித்தல்)
 • தற்போதைய சூழ்நிலையில், தலயாத்திரை செல்லுதல், சமய ரீதியான இடங்களுக்குக் குழுப்பயணம் செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
 • இவற்றுக்குப் பதிலாகப் பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று வழிபடலாம். என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here