டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாமானவர் என்ற பெருமையை 38 வயதான அண்டர்சன் பெற்றார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் கடந்த 21-ஆம் திகதி தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 583 ஓட்டங்களை குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 273 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்து பாலோ-ஆன் ஆனது.

இங்கிலாந்து ‘பாலோ-ஆன்’ வழங்கியதால் 310 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தலைவர் அசார் அலி (29 ஓட்டங்கள்), துணை தலைவர் பாபர் அசாம் (4 ஓட்டங்கள்) களத்தில் இருந்தனர். 4-வது நாளில் மழையால் ஆட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்றும் மழை குறுக்கிட்டது. முந்தைய நாள் இரவு மற்றும் காலையில் பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதமானது. இதனால் 4 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆடுகளம் நன்கு காய்ந்து தேனீர் இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் பாகிஸ்தான் வீரர்கள் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அசார் அலி (31 ஓட்டங்கள்), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் பிடி கொடுத்த ஆட்டமிழந்தார்.

இது அண்டர்சனின் 600-வது டெஸ்ட் விக்கெட் (156 ஆட்டம்) ஆகும். இந்த மைல்கல்லை எட்டிய 4-வது பந்துவீச்சாளர், வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாமானவர் என்ற பெருமையை 38 வயதான அண்டர்சன் பெற்றார். இச்சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களில் சுழற்பந்து வீச்சு சூறாவளிகளான இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 83.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்களை எடுத்திருந்த போது, இந்த டெஸ்ட் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வெல்வது 2010-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here