மனைவியின் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்றைய தினம் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி தனது மனைவியின் தந்தையான நாகராசா பூலோகராசா என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மூதூர், சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜேசேகரன் விஜேகரன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மனைவி கர்ப்பிணியாக இருக்கின்ற போது தனது மனைவியை தாக்கிய நேரத்தில் மனைவியின் தந்தையாரான நாகராசா பூலோகராசா என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றத்திற்காக 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்தவரின் மனைவிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 5000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதகாலம் கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here