உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்கத்தவறிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீதான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவரும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் ஆர்.யூ. ஜயசூரிய முன்பாக இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்து நீதிமன்றில் இன்றைய தினம் பிரசன்னமாகிய அதிகாரிகள், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீதான விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாக தெரியப்படுத்தியுள்ளனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் நீதிமன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதற்கான கால அவகாசத்தைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணைகளை அடுத்தவருடம் மார்ச் 17ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here