கிளிநொச்சி – முகமாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் பேராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நேற்றும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணி 5 மணியளவில் நிறைவடைந்தது.

இதன்போது, தகடு 01, மண்டையோடு -02, பல்வரிகள், விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பெற்றி, மகசின் 02 என்பன கண்டெடுக்கப்பட்டன.

அதன் பின்னர் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் அறிவித்தார்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம், மனித எச்சங்கள் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய இலக்கத் தகடு என்பன அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here