அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்படும் நிதியானது மாகாண சபைகளுக்கே ஒதுக்கப்பட வேண்டுமெனவும், மத்திய அரசாங்க உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிதி ஆணைக்குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படும் போது மாகாண சபைக்கு உரியதான சில விடயங்கள் உங்கள் யாவரதும் கவனத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டியுள்ளது.

அரசியல் யாப்பின் உறுப்புரை 154 R(3)ன் கீழ் மாகாணங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் நிதி மாகாணத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடப்பதில்லை.

உண்மையில் சட்டப்படி மத்திய அமைச்சர்களுக்கு மாகாணம் சார்பாக கொடுக்கும் பணம் அனைத்தும் மாகாண சபைகளுக்கே கையளிக்கப்பட வேண்டும்.

மாகாணங்களை நிர்வகிக்க வேண்டியது மாகாணத்தவரே அன்றி மத்திய அரசாங்கத்தினர் அல்ல.

வலுக்குறைந்த 13வது திருத்தச் சட்டத்தை மேலும் வலுவற்றதாகச் சித்தரிக்கவே இவ்வாறு தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நிதி ஆணைக்குழு இதுபற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கின் வசந்தத்தை குழிதோண்டி புதைத்தவர் சி.வி. விக்னேஸ்வரனே எனவும், அவரின் கருத்துகளை எவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here