வவுனியா காவல்துறையினரால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்; இவ் அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று (17) காலை நகர்ப்பகுதிகளில் காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொரோனா தாக்கம் அதிகரித்து செல்வதால் தேவைக்கேற்ப நகருக்குள் பிரவேசிப்பதுடன் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும்.

வங்கிகள், வியாபார நிலையங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பது சாலச்சிறந்ததாகும். 20 நொடிகள் கைகளை கழுவியே உட்செல்லுங்கள். அத்தோடு சமூக இடைவெளியையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வர்த்தக உரிமையாளர்களுக்கான அறிவித்தல்;

வர்த்தக நிலையங்களில் பணிபுரிபவர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வியாபார நிலையத்திற்கு முன்பாக கைகழுவுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் தனிநபர் இடைவெளியை பேணவேண்டும் என்பதையும் அறிவுறுத்துகின்றோம்.

இவ் அறிவுறுத்தல்களை தங்களால் மீறப்படும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை நகர்பகுதிகளில் அதிகமான திருடர்கள் இருப்பதனால் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதையும் தேவைக்கு அதிகமாக பணத்தினை கொண்டு வருவதனையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சுகாதார அறிவுறுத்தல்களை மீறும்பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா காவல்துறையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here