வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் எதிர்வரும் 19.10.2020ம் திகதி திங்கட்கிழமை வடமாகாணம் தழுவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தினமும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து கடமைக்காக சென்றுவந்த நிறைமாத கர்ப்பிணியான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தனக்கான தற்காலிக இடமாற்றத்தை இரண்டு தடவைகள் கோரியிருந்தும் அது குறித்த திணைக்கள தலைவரால் மறுக்கப்பட்டதன் காரணமாக தொடந்தும் தனது பிரயாணத்தை மேற்கொண்ட நிலையில் அவர் தனது குழந்தையை பிரசவிப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இழந்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் பல அவ்வபோது வடமாகாணத்தில் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

இத் துன்பியல் நிகழ்வு அரச உத்தியோகத்தர்களாகிய அனைவரையும் மிகுந்த மனவுளைசலுக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் இடமாற்றம் கோரிய சந்தர்ப்பத்தில் அது மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட்டிருப்பின் குறித்த இழப்பினை தவிர்த்திருக்க முடியுமென நாம் கருதுகின்றோம்.

இவ் மனிதாபிமானமற்ற செயலை கண்டித்தும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதனை உரிய அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டுமென்ற அடிப்படையிலும் இவ் சுகயீன போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இச்சம்பவத்தை தனியொரு அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு மாத்திரம் நடந்த விடயமாக கருதாமல் எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கு நடந்திருந்தாலும் அதனை நாம் மனிதாபிமான முறையில் அவசியமாக அணுகவேண்டுமென்ற அடிப்படையில் இப்போராட்டத்திற்கு வடமாகாணத்தில் காணப்படும் அனைத்து அரச சேவையாளர்களது தொழிற் சங்கங்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து வலுச்சேர்க்க கூடிய வகையில் சுகயீன விடுப்பினை அறிவித்து ஆதரவு தருமாறு வேண்டுகின்றோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here