இலங்கையின் தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கி.மீ.(489 கடல் மைல்) தொலைவில் ஒரு தீவிர தாழமுக்கம் உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தாழமுக்கமானது எதிர்வரும் 23.11. 2020 அன்று கிழக்கு கடற்கரைக்கு அண்மித்து நகர்ந்து 25.11.2020 மற்றும் 26.11.2020 காலப்பகுதியில் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்தும் காணப்படும்( திகதிகளில் மாற்றங்கள் நிகழலாம் ஏனெனில் தற்போதைய நிலைமையிலேயே இந்த எதிர்வு கூறல் உள்ளது).

இதனால் எதிர்வரும் 23.11.2020 இலிருந்து பரவலாக மழை கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு கிடைக்க தொடங்கும். எனினும் கிழக்கு மாகாணத்திற்கு 23 மற்றும் 24ம் திகதிகளில் கனமழையும் கடும் வேகத்தில் காற்றும் வீசும். வடக்கு மாகாணத்தில் 24, 25 மற்றும் 26ம் திகதிகளில் கனமழையும் கடும் வேகத்தில் காற்றும் வீசும்.

இன்று ( 22.11.2020) முதல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். கண்டிப்பாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்கவும். தற்போதைய நிலையில் தாழமுக்கமாக காணப்படும் இந்த தாழமுக்க நிலைக்கு மறைவெப்ப சக்தி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் இது சில சமயம் புயலாகக் கூட மாறலாம்( தற்போது வரை வாய்ப்பில்லை, ஆனால் வளர்ச்சி நிலையை மாறலாம்)

வடக்கு மாகாண நிலைமைகளைப் பொறுத்தவரை தற்போது வரை எமக்கு கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி இதுவரை கிடைக்க வேண்டிய மொத்த மழைவீழ்ச்சியில் 46% மட்டுமே கிடைத்துள்ளது. எனவே எமக்கு ஒரு பெருமழை அவசியம். அந்தப் பெருமழை இதுபோன்ற தாழமுக்கம் அல்லது புயலினாலேயே சாத்தியம். ஆகவே இந்தத் தாழமுக்கம் எமக்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால் தாழமுக்கங்கள் புயல்கள் எப்போதும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஆகவே பொறுப்புக்குரிய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வதனூடாக பாதகமான விளைவுகளை தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here