வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதி எங்கும் நாளைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் தற்போது நீதிமன்றங்களினால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், நாளை மாலை 6.05 மணிக்கு மக்கள் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதற்கு சட்டரீதியாக எந்த தடைகளுமில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் 6 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய 46 பேருக்கு தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது வெளியில் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரும், பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவேந்தல் நடக்கலாமென பாதுகாப்பு தரப்பினர் கருதும் இடங்கள் இராணுவம், பொலிசாரின் துப்பாக்கி முனையின் கீழ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நகர்ப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே இருந்த இராணுவ சோதனைச் சாவடிகளை விட விசேடமாக போலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வழமையைவிட அண்மை நாட்களாக இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகள், மோட்டார் சைக்கிள் படையணியின் நடமாட்டம் என மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் அச்ச உணர்வுடன் நடமாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகர் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்கரையில் வழமையாக நினைவேந்தல் நிகழ்வு செய்யப்படுகின்ற நிலையில் கடற்கரையில் போலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். நகர் பகுதிகளில் வீதிகளிலேயே இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளும் சுமார் 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இராணுவத்தினர் வீதிகள் எங்கும் சென்று வருகின்ற நிலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

தாம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான உணர்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செயற்பாடுகளுக்கு அரசியல் பிரமுகர்களும், பொது அமைப்புக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here