மாவீரர் தினத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து வெளியிடப்பட்ட பதிவுகள், நீக்கப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் பதிலளித்துள்ளது.

கடந்த 27ம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்கள் குறித்து, பகிரப்பட்ட பெரும்பாலான பேஸ்புக் கணக்குகள் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் மூடப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் தாம் பேஸ்புக் நிறுவனத்திடம் வினவியதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

“மக்கள் தங்கயுடைய எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கிய கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தவும் பேஸ்புக்கிற்குள் பிரவேசிப்பதை நாம் வரவேற்கின்றோம். எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்தும் நீக்கும்” என அவர் பதிலளித்துள்ளார்.

வெறுப்பையோ அல்லது வன்முறையையோ பரப்பும் வகையில் தங்கள் தளம் பயன்படுத்தப்படுவதை தாம் விரும்பவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.

எனினும், ஒரு குறிப்பிட்ட இயக்கம் அல்லது தனிப்பட்ட நபர் வன்முறைக்கு வித்திட்டார் என்பதை எதனடிப்படையில் பேஸ்புக் முடிவு செய்கிறது என்ற கேள்விக்கு, “வெறுப்பை தூண்டும் அமைப்புகளை பட்டியலிடுவதற்கு நாங்கள் ஒரு விரிவான செயல்முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த செயல்முறையைச் செம்மைப்படுத்த உலகெங்கிலும் உள்ள பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்” என பேஸ்புக் பதிலளித்துள்ளது.

உதாரணமாக, இனம், மத சார்பு, தேசியம், பாலினம், பாலியல் நாட்டம், கடுமையான நோய் அல்லது இயலாமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுத்த அல்லது நேரடியாக வன்முறையில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்களை வெறுப்புணர்வை தூண்டும் அல்லது ஆபத்தான இயக்கங்கள், தலைவர்களாக வகைப்படுத்துவதாக பேஸ்புக் மேலும் விளக்கம் அளித்துள்ளது.

“ஆபத்தான அமைப்புகளை தடைசெய்யும்போது, அவற்றின் இருப்பை அகற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும், எங்கள் கண்டறிதல் முறைகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

வெறுப்புணர்வை தூண்டும் திட்டமிடப்பட்ட செயலுக்கு எதிரான பேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காக நீக்கப்படும் பெரும்பாலான உள்ளடக்கங்களுக்கு தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உள்ளடக்க மதிப்பாய்வே காரணம் என்றும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஒரு குழுவை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் நீக்குவதற்கான பணியிலும் பேஸ்புக் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில பேஸ்புக் பயனர்களின் பதிவுகள், பேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் அவற்றை நீக்கியது சரியே என பேஸ்புக் உறுதியாகக் கூறுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில பேஸ்புக் பயனர்களின் பதிவுகள், பேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் அவற்றை நீக்கியது சரியே என பேஸ்புக் உறுதியாகக் கூறுகிறது.

எனினும், பேஸ்புக்கில் பயனர்கள் பகிர்வதற்கு உத்தியோகப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள், தலைவர்கள் மற்றும் விவகாரங்களின் ஒட்டுமொத்த பட்டியலை அளிக்க விடுத்த வேண்டுகோளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை என பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.