ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சச்சின் மகன் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் 1009 ஓட்டங்கள் குவித்த பிரணவ்வை மறந்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் ஆன, அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் தன்னுடைய ஆரம்ப ஏல விலையை 20 லட்சமாக நிர்ணயித்துள்ளார். இவரை எப்படியும் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துவிடும், அவர் ஆட்டம் அந்தளவிற்கு இல்லை என்றாலும், மும்பை அணி எடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இணையத்தில் சச்சின் மகன் மற்றும் பிரணவ் தனவாடே என்ற ஒரு விவாதம் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது, மும்பை பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே கடந்த 2016-ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு படிக்கும் போதே பள்ளி கிரிக்கெட் போட்டியில் 323 பந்துகளில் 1009 ஓட்டங்கள் எடுத்து உலகையே பிரமிக்க வைத்தார்.

அந்த இன்னிங்ஸில் 129 பவுண்டரிகளையும் 59 சிக்சர்களையும் அடித்து நொறுக்கியிருந்தார். டோனி தான் என்னுடைய ரோல் மொடல் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அப்போது கிட்டத்தட்ட அதே வயதுடைய சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் பிரணவ்வுடன் கம்பேர் செய்யப்பட்டு வந்தார்.

ஆனால், 2016-ல் அந்த மெகா இன்னிங்ஸுக்கு பிறகு பிரணவ் எந்த ஒரு இன்னிங்ஸும் பெரிதாக ஆடவில்லை. இருப்பினும் பெரிய அந்த இன்னிங்ஸுக்கு பிறகு, மும்பை கிரிக்கெட் சங்கம் அவருக்கு மாதம் 10,000 உதவித் தொகை என்கிற விகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு தருவதாக அறிவித்தது.

ஆனால், அவரின் தந்தையோ மகனின் ஆட்டம் சரியில்லை என்பதால், அவர் உதவித் தொகை வேண்டாம் என்று கடந்த 2017-ஆம் ஆண்டு கடிதம் எழுதி அனுப்பி வைத்துவிட்டார்.

அதே சமயம் அர்ஜுன் டெண்டுல்கரும் அந்தளவிற்கு எந்த ஒரு தொடரிலும் சொபிக்கவில்லை, ஆனால் அவர் ஒரு கிரிக்கெட் வீரரின் மகன் என்பதால், பல இடங்களில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதுவே சிறப்பாக விளையாடிய பிரணவ்வை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செய்திருந்தால், அவரும் இன்று இந்த ஐபிஎல் நிலைக்கு வந்திருப்பார்.

ஆனால் அவர் என்ன ஆனார் என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தெரியவில்லை, இதனால் திறமை கொண்ட வீரர்களை தேடி பிடித்து அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தால், அவர்கள் பிறகாலத்தில் பெரிய வீரர்களாக உருவாகலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.