“நீ கூட்டமைப்பு ஆளா?, கூட்டமைப்புக்கா வேலை செய்கிறாய்? கூட்டமைப்பின் சுமந்திரன், மாவை ஆக்களுக்கு வேலை செய்த பிரதேச செயலர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலரையும் இடமாற்றினோம். கவனமாக இருக்க வேண்டும்.” என சங்கானை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை, அரசியல்வாதி ஒருவரின் தந்தை, யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டம் ஒன்றில் மிரட்டியுள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது. 15 பிரதேச செயலகங்களில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலரால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு அமைவாகக் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

கூட்டத்தின் ஆரம்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தந்தை, முகநூலில் இருந்து எடுக்கப்பட்ட சில தகவல்களைக் காண்பித்துள்ளார்.

அதில் சங்கானை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதிவை, மறு பதிவு செய்திருந்தார். அத்துடன் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் பதிவு ஒன்றின் கீழ் அவரை விமர்சிக்கும் பதிவு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

அவை தொடர்பான ஆதாரங்களை அச்சுப் பிரதி எடுத்து அவற்றைக் கூட்டத்தில் பகிரங்கமாகக் காண்பித்து மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தரை நாடாளுமன்ற உறுப்பினரின் தந்தை மிரட்டியுள்ளார்.