பாகிஸ்தானில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவது குறைவாக இருப்பதனால் தொற்று பரவும் அபாயம் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முககவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விடயங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்க்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 16 நகரங்களில் விசேட சுகாதார நடைமுநைகளை அமுல்ப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 902 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் நேற்றைய தினத்தில் 3 ஆயிரத்து 285 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சடலங்களை எரிப்பதற்காக நீண்ட வரிசையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது.

இதேவேளை, பிரேசிலில் நேற்றைய நாளில் 76 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவில் 52 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 885 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் நேற்றைய நாளில் மாத்திரம் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 14 ஆயிரத்து 850 பேர் உயிரிழந்துள்ளனர்.