சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இலங்கைக்கு அடுத்த மாதம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அண்மைய மாதங்களில் சீன உயர்மட்ட அதிகாரியொருவர் விஜயம் செய்யும் மூன்றாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இந்த நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe கடந்த வாரம் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்திருந்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், சீனாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான தலைவரான Yang Jiechi கடந்த வருடம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஆசிய பிராந்தியத்துக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக, சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் அண்மையில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பிலும் அவர் உரையாற்றியிருந்தார்.

இதன்போது, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.