தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை, ஆதார வைத்தியசாலையின் – நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் லயன் சி.ஹரிகரன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

இலங்கைத் திருநாட்டின் வடக்கே வடமுனையில் அமையப்பெற்ற புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மாகாண நிர்வகிப்பின் கீழ் உள்ள ஒரு மிகப்பெரிய அரச வைத்தியசாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகளுடன் மட்டும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு இயங்கிவந்தது. 2011 ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் ‘கலர்ஸ் ஒவ் கரேஜ்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 30 கோடி ரூபா செலவில் கல்விக்காருண்யன் லயன் ஈ.எஸ்.பி.நாகரட்ணம், மாணிக்க சோதி அபிமன்னசிங்கம் ஆகியோரால் நன்கொடையாக காணி வழங்கப்பட்டு புற்றுநோய் வைத்தியசாலையை உருவாக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக நிர்மாணிக்கும் பொருட்டு டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் ‘மாஸ் இன்டிமேட்’ நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் அவரது நண்பர் சரித்த உனப்புவ ஆகியோர் தலைமையில் தெற்கே தெய்வேந்திரமுனை முதல் வடக்கே பருத்தித்துறை வரையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக 30 கோடி ரூபா நிதியை சேகரித்திருந்தனர்.

2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 670 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்தப் பாதயாத்திரையின் போது 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர்; கலந்துகொண்ட அதேவேளை 12 பேர் மட்டுமே முழுமையாக பங்கெடுத்திருந்தனர்.

2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வழி நெடுகிலும் இன,மத பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து உதவிகளைப் புரிந்துள்ள நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் தமது பங்களிப்பை வாரி வழங்கினர்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதி உரிய தரப்பினரிடம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு என்று வழங்கப்பட்டிருந்தும் கட்டுமானப் பணிகளோ அதற்கான ஏற்பாடுகளோ எவையும் இடம்பெறாமல் அவ்வாறான ஒரு நிதி இருக்கு என்ற அக்கறையே இல்லாத நிலை இருந்தது.

2011 நவம்பர் மாதம் உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டதும், வைத்தியசாலை அமைந்துள்ள பகுதி ஆளுகைக்குட்பட்ட வலி.வடக்கு பிரதேசசபையில் என்னால் இந்த நிதிக்கு என்ன நிலைமை? எதற்காக இன்னும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானங்கள் இடம்பெறவில்லை என்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கும், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பிவைத்தோம்.

ஜனாதிபதி மஹிந்தவின் விரைவான உத்தரவால் உடனடியாகக் கட்டுமானப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு நிறைவுற்று புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு திறந்துவைக்கப்பட்டமை வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டமையப் பெற்றுள்ள இந்த வைத்தியசாலையில் பிரத்தியேகமான பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் விடுதி, சிறுவர் பூங்கா என்பன அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 120 கட்டில்களும் போடப்பட்டுள்ளன.

இந்த வைத்தியசாலையின் ஊடாக யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது வடக்குமாகாண மக்களும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெற முடியும் நிலைமை உருவானது. இன்று மஹரகமவுக்கு இணையான சகல வசதிகளும் அதாவது ஜீனியாசிலேற்றர் முதற்கொண்ட நவீன சிகிச்சை வசதிகளுடன், நோயாளர்களுக்கு முழுமையான ஒரு சிகிச்சையை வழங்கும் அளவுக்கு பரவி விரிந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு காணப்படுகின்றது.

ஆரம்பத்தில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் என்று சகல பணியாட்தொகுதியும் யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது வைத்திய நிபுணர்கள், கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் என 10 பேர் மட்டுமே போதனா வைத்தியசாலையின் பணியாள்களாகக் காணப்படுகின்றனர்.

ஏனைய சகல பணியாள்களும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையினாலேயே வழங்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலை திறப்பு நிகழ்வில் அப்போதைய சுகாதார அமைச்சரும் பின்னர் 2014 – 2019 ஆம் ஆண்டுக்காலப் பகுதி ஜனாதிபதியுமாகிய மைத்திரிபால சிறிசேன உரையாற்றியபோது, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு எந்தக் காலத்திலும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் ஆளுகையிலிருந்து பிரிக்கப்படமாட்டாது.

மத்தி, மாகாணத்துக்கு வழங்கிய அதிகாரத்தை மீளப்பெறமாட்டாது என்ற உத்தரவாதத்தை வழங்கினார். ஆனால், இன்று சில வியாபார நோக்கம் கொண்டவர்கள் தமது சுயலாபத்துக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை மத்திக்கு எடுப்பதற்குத் தலையால் குட்டிக்கரணம் அடிக்கின்றார்கள்.

இது இவ்வாறிருக்க, புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சகல வசதிகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றும், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணியாட் தொகுதியாகிய கதிரியக்க தொழிநுட்பவியலாளர்களின் மனிதநேயமற்ற கடமை உணர்வற்ற விட்டேத்திப் போக்கால் கதிரியக்கப்பிரிவுக்கு வரும் புதிய நோயாளர்களை மஹரகமவுக்குச் செல்லுமாறு அனுப்புகின்றார்கள்.

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வசதிபடைத்த செல்வந்தர்களே மஹரகமவுக்குச் செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படும் இந்த நேரத்தில், அப்பாவி மக்கள் – வசதி குன்றியவர்கள் – தெல்லிப்பழையில் சகல வசதிகளும் இருந்தும் மஹரகமவுக்கு செல்கின்றமை எவ்வாறு சாத்தியமாகும்? புற்றுநோயாளர் ஒருவருக்கு ஜீனியாசிலேற்றர் ஒழுக்குமுறை தவறாமல் சிகிச்சை வழங்கினால் பல நோயாளர்களைக் குணப்படுத்த முடியும்.

ஆனால், இந்த உத்தியோகத்தர்கள் அவர்களுக்குக் கிரமமாக வழங்காது கிரமமின்றி வழங்குவதால் அவர்களின் நோய்த்தாக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றார்கள். இதற்கான அடிப்படைக் காரணம் தமக்கு 2 லட்சத்துக்கு மேல் மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்பதற்காக! மஹரகமவில் 100 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதும் தெல்லிப்பழையில் 20 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதும் ஒன்றாகுமா? அரச நிதி முகாமைத்துவம் இதற்கு இடமளிக்குமா? ஆனால், நோயாளர்கள் துன்பப்பட்டு, அல்லற்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் முறையிட்டு, இவர்களை நிர்வகிக்கின்ற போதனா வைத்தியசாலையில் முறையிட்டும் அப்பாவி நோயாளர்களுக்கு எந்தத் தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை!

வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்று எல்லோரும் பதவிக்கதிரைகளை அலங்கரித்துக்கொண்டு – சூடேற்றிக்கொண்டு – இருக்கிறார்களே தவிர, நோயாளர் தொடர்பில் எந்தக் கரிசனையும் எடுப்பவர்களாகத் தெரியவில்லை.

இவர்களைக் குறைகூறி என்ன பயன்? யாழ்.மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், க.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் என்று மக்களின் வாக்குகளை அவர்களுக்கு சேவைசெய்வோம் என்று பசப்பு வார்த்தைகள் பலகூறிப் பெற்றவர்கள் கூட அந்த மக்களின் துன்பத்துக்கு – அதுவும் கொடிய புற்று நோயாளர்களின் துயரத்துக்கு – பாராமுகமாகச் செயற்படுகின்றமை வேதனைக்குரியது.

இந்த தொழிநுட்பவியலாளர்கள் தென்னிலங்கையையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர்கள். இவர்களை அவர்களின் மாவட்டத்துக்கோ அல்லது மகரகமவுக்கோ மாற்றிவிட்டு இங்கு வடபகுதியைச் சேர்ந்த கடமை உணர்வும் மண்பற்றும் கொண்டவர்களை பணிக்கமர்த்த அமைச்சரோ ஆளுநரோ ஒருங்கிணைப்புக்குழு தலைவரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ நடவடிக்கை எடுப்பார்களாயின் ஒட்டுமொத்த வடக்குக் கிழக்கு தமிழினத்துக்கும் இவர்கள் ஆற்றிய பெரும் சேவையாக அது கொள்ளப்படும். செய்வார்களா நம் தமிழ் பிரதிநிதிகள்……?