வவுனியாவில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற குழு வகுப்புக்கள் இரண்டு சுகாதார பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.

இன்று (04.05) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அறிவுறுத்தல்களை மீறி வவுனியாவில் சில குழு வகுப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குழு வகுப்புக்கள் நடைபெற்ற இரண்டு நிலையங்கள் சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிடப்பட்டன.

அந்தவகையில், வவுனியா தோணிக்கல் பகுதியில் 6 மாணவர்களுடனும், குட்செட் வீதியில்  5 மாணவர்களுடனும் குழு வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற சுகாதார பரிசோதகர்கள் குறித்த இரு வகுப்புக்களையும் இடை நிறுத்தியதுடன், அங்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி கற்ற மாணவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்ததுடன், கடும் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.