நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 உயிர் காக்கும் மருந்துகளுக்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் 22 உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இது தொடர்பில் அராங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று நெருக்கடி நிலைமை தொடர்பில் விவாதம் நடத்தும் வகையில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்தது.

இதற்கமைய இன்று காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரையான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முன்வைத்தார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பிலான இந்தச் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்த ராஜித சேனாரத்ன அரசாங்கம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை பார்க்கையில், இந்தியாவை விட ஆபத்தான நிலைல் இலங்கை இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் சுகாதார வசதிகள் மற்றும் சனத்தொகை பரம்பலுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தொற்று வீதம் அதிகமாக காணப்படுகின்றது.

இந்தப் புதிய வைரஸ் தொற்று வயது வித்தியாசமின்றி அனைவரிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை வைத்திய சபை எச்சரித்துள்ளது.

வெளிநாட்டினரை இந்த நாட்டிற்கு வரவழைக்க வேண்டாம் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர் எனினும் அதனை அரசாங்கம் செய்யவில்லை. இந்த நாட்டை முடக்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர், நான்காவது அலை தோற்றம் பெற்றுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டது.

எனினும் அதனையும் இந்த அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. இந்த விடயத்தில் அரசியல் தலையீடுகள் அவசியமில்லை. மேலிருந்து கிடைக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு அமைய சுகாதார அமைச்சு செயற்பட வேண்டாமென நாம் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் 220 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சரியான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை.

நாட்டில் உயிர் காக்கும் மருந்துகள் 40 இலங்கையில் இல்லாமல் போயுள்ளது. மேலும் 22 உயிர் காக்கும் மருந்துகள் இந்த வாரத்தில் இல்லாமல் போகுமென தகவல்கள் வெளியாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.