வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராமம் இன்று காலை 10 மணி வரை முடக்கப்படவில்லை. கிராம மக்களின் வழமையான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குருக்கள் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அக் கிராமத்தில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 10 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டதுடன், 100 பேருக்கு கடந்த திங்கள் கிழமை பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் வவுனியாவின் குருக்கள் புதுக்குளம் கிராமம் இன்று (05.05) அதிகாலை முதல் முடக்கப்படுவதாக கொவிட் செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த கிராமத்தில் மூன்று பேர் மாத்திரமே தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அங்கு 100 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் முடிவுகள் கிடைக்கப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், தற்போது கிராமம் முடக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தின் உள்ள பலர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களில் வேலை செய்வதுடன், கூலி வேலைகளுக்கும் செல்பவர்களாகவும் உள்ளனர். அவர்கள் வழமை போன்று தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், சிலர் தமது கிராமம் முடக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது தெரியாது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இருப்பினும், பிசீஆர் முவுகளைப் பொறுத்தே முடக்படுவதா இல்லையா என தெரிவிக்கப்படும் என பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.