அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியூதீனை நாடாளுமன்றிற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் சற்று முன்னர் அவர் இந்தக் கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் முன்வைத்துள்ளார்.

ரிசாட் பதியூதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்றில் வந்து உரையாற்றுவதற்கு அனுமதிப்பது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள் மறைந்து கொண்டு வெளியிடும் கருத்துக்கள் எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பில் கைதாக உள்ளவர்கள் தப்பிச் செல்லக்கூடிய சூழ்நிiயை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான ஓர் விடயம் என்பதனால் ரிசாட்டை நாடாளுமன்றம் வர அனுமதிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றிற்கு வருவதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.