ஆட்டுப்பட்டித்தெரு – கதிரேசன் வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரேசன் வீதியில் கடந்த 2 ஆம் திகதி முச்சக்கர வண்டி சாரதியொருவரை பொலிஸார் என்று அடையாளப்படுத்திக் கொண்ட இருவர், கடத்திச் சென்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டி சாரதியிடமிருந்து, அவர் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துக் கொண்டுள்ளதுடன், பின்னர் அவரை வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியிலிருந்து இறக்கிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் தனியார் தங்க நகை வைப்பு நிலையமொன்றில் மோதிரத்தை வைப்புச் செய்துள்ளதுடன், முச்சக்கர வண்டியை பொரளை பகுதியில் கைவிட்டுச் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை பொரளை பகுதியில் வைத்து சந்தேக நபர்களிருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்புரிந்த நிலையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள உபபொலிஸ் பரிசோதகர் ஒருவரும் காணப்படுகின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விவகாரம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித்மெத்தானந்த, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த விஜேசிங்க மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விஜேசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன.