ஆப்கானிஸ்தானில் யுத்தம் நிறைவடைந்துள்ளதாக தலிபான் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த உள்நாட்டு யுத்தம் இதனூடாக நிறைவுக்கு கொண்டுவரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தங்களின் முயற்சியின் பலனை அடைந்துள்ளதாகவும்  இன்றைய நாள் சிறந்த தருணமாகும் என தலிபான்களின் அரசியல் விவகார ஊடகப் பேச்சாளர் மொஹமட்நயீம் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு விரும்பும் மக்களை தலிபான்கள் விடுவிக்க வேண்டும் என அமெரிக்க பிரித்தானியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் முழுமையான அதிகாரம் கொண்டவர்கள் உயிர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பினை கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்

இதேவேளை காபூல் நகரை தலிபான் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றவுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி Ashraf Ghani நேற்று நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையினை கைப்பற்றியுள்ளதாகவும் அறிவித்திருந்தனர்

இதனிடையே  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் விசேட கூட்டம் ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெறவுள்ளது.

அமெரிக்க நேரப்படி  முற்பகல் 10 மணியளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை தலிபான் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் காபூலில் தங்களின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்

அத்துடன் உயிர்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் தலிபான்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.