இளம்தாயொருவரை கொலை செய்த காமுகனை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி இந்த கொலை நடந்தது. பன்னிரட்டிய மாவத்தை பகுதியிலுள்ள குடியிருப்பபொன்றில் அறையொன்றை வாடகைக்கு பெற்று இளம் தம்பதியொன்று குடியிருந்தது.

23 வயதான பிரியதர்சனி, 25 வயதான கணவர், 4 வயதான மகன் ஆகியோர் குடியிருந்தனர். கணவர் மேசன் தொழிலாளி. கடந்த 2மாதங்களின் முன்னரே  அந்த வாடகை அறைக்கு அவர்கள் குடிவந்திருந்தனர். கணவர் கடந்த 24 ம் தேதி வேலைக்காக பன்னிப்பிட்டிக்கு சென்றிருந்தார்.

அறையில் இறந்த பெண்ணும் குழந்தையும் மட்டுமே இருந்தனர்.  இந்நிலையில்  தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவர் மஹரகம பொலிஸாருக்கு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அந்த குடியிருப்பின் பல அறைகளில் தங்கியிருந்தவர்களிடம்   விசாரணை நடத்தினர்.

அதில் ஒரு ஜோடியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குடியிருப்பின் பிறிதொரு அறையில் தங்கியிருந்த ஜோடியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இளம் ஆண் ஒருவரே அந்த கொலையை நடத்தியது தெரிய வந்தது.

24 ஆம் தேதி அதிகாலை 01.15 மணியளவில் அந்தப் பெண் கழிப்பறைக்குச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்த சத்தத்தைக் கேட்டதாகவும், அவர் கழிவறைக்குச் சென்று திரும்பியபோது, ​​அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும்  சந்தேக நபர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

பெண்ணின் மீது  நீண்டநாள் ஆசையிருந்ததால் கணவர் இல்லாத நேரத்தில் அவரது நடமாட்டத்தை அவதானித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் திடீரென தகாத முறையில் நடந்துகொண்ட  தன்னை, அந்தப் பெண் தள்ளி விட்டதாகவும், அதனால்  தான் நிலத்தில் விழுந்ததாகவும் சந்தேகநபர்  தெரிவித்துள்ளார்.

 எனினும் சுதாரித்தெழுந்து  மீண்டும்  பெண்ணிடம்  தவறாக நடக்க முற்பட்டபோது, அவர்   தவறி நிலத்தில் விழுந்து சத்தமிட முயன்றபோது, அருகிலுள்ள கட்டையொன்றினால் பெண்ணின் தலையில் அடித்ததாக சந்தேகநபர்  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மயக்கமடைந்த பெண்ணை அவரது அறைக்கு தூக்கிச் சென்று படுக்க வைத்ததாகவும், அப்போது குழந்தை விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்ததால், அச்சமடைந்து அறையை விட்டு வெளியேறியதாகவும்  சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் எதுவும் தெரியாததை போல தனது அறைக்கு சென்று மனைவியுடன் உறங்கியதாக தெரிவித்துள்ளார். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு மாணவி அதிகாலையில் படிக்க எழுந்தபோது, தொடர் அழுகையை அவதானித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் அந்த அறையை நெருங்கி உள்ளே பார்த்தனர். குழந்தையின் அழுகை நிற்கவில்லை. அவர்கள் சத்தமிட்டு கூப்பிட்டும் தாயார் எழுந்திருக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அயலவர்கள் அறைக்குள் சென்ற போது, அந்த பெண் மயக்கநிலையில் இருந்தார். உடனடியாக அவர் களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.