கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாத்திரையை, இலங்கையிலும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளாா்.

இதுதொடர்பில் தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகத்திடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாா்க் என்றழைக்கப்படும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தினால் கொரோனா தொற்று நோய்க்காக புதிய வகை மாத்திரையொன்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொல்னுபிரவிய (Molnupiravir) என்ற பெயரால் இந்த மருந்து அடையாளப்படுத்தப்படுகின்றது.கொவிட் – 19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பல்வேறு உலக நாடுகள் இந்த மாத்திரயை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்கப்படுத்தல் இராஜாங்க அமைச்சு என்ற அடிப்படையில், இதுதொடர்பில் விசேட குழுவின் நிலைப்பாட்டை அறிந்து, இலங்கைக்கு அந்த மாத்திரைகளை கொண்டுவருவதா? அவ்வாறு கொண்டுவருவதானால் எப்போது கொண்டு வருவது? எந்தளவு கொண்டுவர வேண்டும் என்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகத்திடம் கோரியுள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மாத்திரை இதுவரையில் பரிசோதனை மட்டத்திலேயே இருந்து வருகின்றது. இருந்தபோதிலும், இந்த மாத்திரையில் ஆரம்பகட்ட பரிசோதனை நடவடிக்கைகைள் வெற்றியடைந்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் அறிவித்திருக்கிறாா்கள்.

இந்த மாத்திரைகளை முறையாக வழங்கப்படும் போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் மரணங்களின் வீதம் என்பவற்றை குறைத்துக்கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகள் இதுவரையில் இந்த மாத்திரையை பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம்காட்டி வருவதாக மாா்க் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.