வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.  

இன்று காலை (14.10) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீடு ஒன்றின் கூரை மற்றும் யன்னல் தூவரம் ஊடாக நெருப்பு மற்றும் புகை என்பன வெளிவந்ததைத் தொடர்ந்து அயலவர்கள் சென்ற போது வீட்டின் அறைப்பகுதியில் குறித்த வீட்டில் வசித்து வந்த பெண் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அயலவர்கள் கதவினை உடைத்து தண்ணீர் விசிறி தீயிணை அணைக்க  முயற்சித்துள்ளனர். இருப்பினும் குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்ப பெண் முற்றாக தீயில் எரிந்து மரணமடைந்துள்ளதுடன், அறை ஒன்றும் முழுமையாக எரிந்து உடமைகளும் அழிவடைந்துள்ளன.

இதனையடுத்து அயலவர்கள் கிராம அலுவலர் ஊடாக பூவரசன்குளம் பொலிசாருக்கு வழங்கி தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது குறித்த குடும்பத்தின் கணவர் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணி புரிவதாகவும், மனைவிக்கும் அவருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இன்று (14.10) காலை கணவர் வேலைக்கு செல்லாது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த மூன்று மகன்களில் ஒருவர் வேலைக்கும், ஒருவர் கடைக்கும் சென்ற நிலையில் மற்ற மகன் மலசலகூடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது அந்த மகன் வெளியில் வராத வகையில் மலசல கூடம் வெளியில் பூட்டப்பட்ப்பட்டுள்ளது.

இதன்போதே வீட்டில் குறித்த பெண் மீது தீ பற்றியுள்ளது. வீடு தீயில் எரிவதைக் கண்டு அயலவர்கள் வருகை தந்த போது வீட்டில் கணவன் இருக்கவில்லை. அயலவர்கள் தண்ணீர் விசிறி தீயிணை அணைக்க முற்பட்ட போதும் அது பலனின்றி, குறித்த பெண் தீயில் எரிந்து மரணமடைந்துள்ளார். வீட்டின் அறையும் முழுமையாக தீயில் எரிந்து உடமைகளும் நாசமாகியுள்ளன.

குறித்த சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஜேந்திரன் அனற்றா (வயது 43) என்பவரே தீயில் எரிந்து மரணமடைந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பில் கணவனின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த பொலிசார் அவர் நெளுக்குளம் பகுதியில் நின்றிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பூவரசனங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.