வவுனியா – உளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது மாணவன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (17.10) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் உளுக்குளம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டையிழந்து எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது கட்டுப்பாட்டையிழந்த விபத்துக்குள்ளான மோட்டர் சைக்கிள் அவ் வீதி வழியாக சென்ற பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த 16 வயது மாணவன் உள்ளிட்ட மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 16 வயது மாணவன் மரணமடைந்துள்ளார். ஏனைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறிசுமன ம.வி நவோதயா பாடசாலையில் கல்விகற்கும் ஹன்சா டில்சான் மிகிரிங்க என்ற 16 வயது மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.