வவுனியா வடக்கு, முத்துமாரி நகரில் 135 ஏக்கர் வயல் காணியை விடுவிக்குமாறு வனவளத்துறை அமைச்சரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வனவளத்துறை அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் வனவளத்துளைற அதிகாரிகளுடன் இன்று (22.10) இடம்பெற்ற சந்திப்பின் போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

rlir

இச் சந்திப்பின் போது வன வள திணைக்களத்தினர் மக்கள் வாழும் பகுதிகளில் எல்லைக் கற்களை பதிப்பதற்கு முன்னர், பிரதேச செயலாளர்களுக்கு தகவலை வழங்கி அவர்களது கருத்தை கேட்டறிந்து பிரதேச செயலக உத்தியோகத்தருடன் இணைந்தே எல்லைக் கற்களை பதிக்கவேண்டும் எனவும்,

இராணுவத்தினரோ அல்லது விசேட அதிரடிப்படையினரோ, காணிகள் அல்லது பற்றைகளை துப்பரவு செய்யும் பொது மக்களை கைது செய்தால், வன வளத் திணைக்களத்தினர் பிரதேச செயலாளர்களிடம் குறித்த இடம் தொடர்பாக கேட்டறிந்த பின்னரே நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தேன்.

அத்துடன், வவுனியா வடக்கு முத்துமாரி நகர் மக்களின் வாழ்வாதாரப் பயிற்செய்கை நடவடிக்கைக்காக 135 ஏக்கர் வயல்காணி விடுவித்து தருமாறும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காஞ்சூரமோட்டை மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரிடம் கோரியிருந்தேன்.

இதன்போது, வனவளத்துறை அமைச்சர் எதிர்வரும் கிழமை குறித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தார். இதன் மூலம் அம் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.