சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வவுனியாவில் 39 இளைஞர், யுவதிகளுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களால் வேலை வாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகத்தில் இன்று (24.10) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு நாடு பூராகவும் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன் முதலாவது கட்டம் நாடு பூராகவும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

அதனடிப்படையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்களின் சிபார்சின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 39 இளைஞர், யுவதிகளுக்கே இவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக பிரிவில் 22 பேருக்கும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் 10 பேருக்கும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 6 பேருக்கும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் ஒருவருக்கும் என தெரிவு செய்யப்பட்ட 39 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்த குழு தலைவரின் இணைப்பாளர் டினேஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச மட்ட செயற்பாட்டளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.