செட்டிகுளத்தின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் மழை காரணமாக வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்தமையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. செட்டிகுளத்தின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள இலுப்பைக்குளம் வான் பாய்வதன் காரணமாக அக் கிராமத்தில் வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து பாதைகள் நீரில் மூடப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால், 08 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் மேலும் பாதிப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளம் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளில் அப் பகுதி கிராம அலுவலர், செட்டிகுளம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மக்களை பாதுக்காப்பாக இருப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வெள்ள பாதிப்புக்கள் குறித்தும் மதிப்பீடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.