பெண்களுக்கு எதிரான வன்முறை தினமான நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் இத்தினத்திலாவது எனது மகளின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும் என ஹரிஸ்ணவியின் தந்தை கெங்காதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2016ஆம் ஆண்டு எனது மகள் உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள எனது வீட்டில் தனிமையிலிருந்தபோது பாலியல் துஷ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் கடந்தும் இந்த வழக்கு விசாரணைகளின் எவ்விதமான நீதியையும் பெற்றுக் கொள்ளவில்லை.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகத்துடன் படுகொலையும் செய்யப்பட்டுள்ள பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த 14 வயது ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் நாங்கள் நாட்டின் சட்டத்தில் மிகவும் சோர்வடைந்துவிட்டோம். நீதியைப் பெற்றுத்தரும் நீதிமன்றங்களின் நடவடிக்கையில் விரக்தியடைந்து விட்டோம். குற்றவாளி சமூகத்தில் இன்னும் சுதந்திரமாக நடமாடி எத்தனை சிறுமிகளை இலக்கு வைத்துள்ளானோ தெரியவில்லை.

எங்களின் நிலைமைகள் நாட்டில் வேறு எந்தவொரு சிறுமிக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. பெற்றோர்களாகிய எங்களின் துன்பங்கள் வேறு ஒரு பெற்றோர்களுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது.

சரிந்து போயுள்ள சட்டத்தை நிலை நிறுத்தி ஏனைய சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின், பொறுப்பாகும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வழக்கில் எவ்விதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை மன்றிற்கு கிடைக்கவில்லை என்று காரணம் காட்டி கடந்த இரண்டு வருடங்களாக எனது, மகளின் வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.